தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் நண்பர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்


தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் நண்பர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2018 4:30 AM IST (Updated: 3 March 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நண்பர்களால் தாக்கப்பட்ட தொழிலாளி திடீரென இறந்தார். அவரது சாவுக்கு காரணமான போலீஸ் நண்பர்களை கைது செய்ய வலியுறுத்தி மருதங்கோடில் போராட்டம் நடந்தது.

களியக்காவிளை,

குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 50), தொழிலாளி. இவர் கடந்த பிப்ரவரி 3–ந் தேதி கழுவன்திட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த போது, இவருக்கும் போலீஸ் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (40), ஞாறாம்விளையை சேர்ந்த சைஜு (30) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவகுமார், சைஜு ஆகிய இருவரும் சேர்ந்து ராஜனை தாக்கினர். இதனால், காயமடைந்த ராஜன் குழித்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ராஜன் மருதங்கோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீஸ் நண்பர்கள் தாக்கியதில் ஏற்பட்ட காயத்தால் தான் அவர் இறந்ததாக ராஜனின் மனைவி ரெத்தினம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிவகுமார், சைஜு ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ராஜனை தாக்கிய போலீஸ் நண்பர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மருதங்கோடு சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், உறவினர்களுக்கு ஆதரவாக தி.மு.க. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ராஜன் சாவுக்கு காரணமான போலீஸ் நண்பர்களை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பப்பட்டது.


Next Story