ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடிவு: விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடிவு: விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 4 March 2018 3:15 AM IST (Updated: 4 March 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதால் விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, பெரியணை மற்றும் வடக்கலூர் ஆகிய வாய்க்கால்கள் மூலம் சுமார் 6500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பாசனத்திற்கு மே மாதம் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஆண்டுக்கு 11 மாதங்கள் தண்ணீர் வழங்க வேண்டும். அதாவது 1150 நாட்களுக்கு 2 ஆயிரத்து 440 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும்.

ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை. மாறாக பயிர்களை காப்பாற்ற ஆகஸ்டு மாதம் 11-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 15 நாட்களுக்கு சிறப்பு நனைப்பு தண்ணீர் வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒரு போக சாகுபடிக்கு செப்டம்பர் மாதம் 10-ந்தேதியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி வரை உரிய கால இடைவெளி விட்டு 800 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்பட்டது.

தற்போது கரும்பு, வாழை மற்றும் நீண்டகால பயிர்களை காப்பாற்ற ஏப்ரல் 15-ந்தேதி வரை உரிய இடைவெளி விட்டு மாதம் 15 நாட்களுக்கு சிறப்பு நனைப்பு தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கேரளாவுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது கேள்விகுறியானது.

இந்த நிலையில் ஆழியாறு விவசாயிகள் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் கொடுத்த பிறகு, கேரளாவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு புதிய ஆயக்கட்டு விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் எத்திராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது , பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நாளை (திங்கட்கிழமை) தண்ணீர் திறப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பபடும். அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஏப்ரல் மாதம் அணையின் நீர்இருப்பை பொறுத்து பரிசீலலனை செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் கலைமாறன், பரம்பிக்குளம் செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் கருணாகரன், நரேந்திரன், பழைய ஆயக்கட்டு விவசாய நலச்சங்க தலைவர் வாசுதேவன், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் நல கூட்டமைப்பு தலைவர் அசோக் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story