சென்னை விமான நிலையத்தில் 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பன்னாட்டு முனைய வருகை பகுதி


சென்னை விமான நிலையத்தில் 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பன்னாட்டு முனைய வருகை பகுதி
x
தினத்தந்தி 4 March 2018 5:30 AM IST (Updated: 4 March 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனைய வருகை பகுதி கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், அண்ணா பன்னாட்டு முனையம் மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையங்களாக செயல்பட்டு வந்தன. விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமான நிலையத்தில் முனையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு பன்னாட்டு முனையத்துக்கு வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளும், அதேபோல் உள்நாட்டு முனையத்திலும் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

வருகை பகுதி செயல்படவில்லை

இதில் உள்நாட்டு முனையத்தில் உள்ள வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளும், பன்னாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதி மட்டுமே செயல்பட தொடங்கியது.

ஆனால் பன்னாட்டு முனையத்தில் உள்ள வருகை பகுதி மட்டும் இன்னும் பழைய கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது. பன்னாட்டு முனையத்தில் உள்ள வருகை பகுதிகளில் சுங்க இலாகா, குடியுரிமை மற்றும் பாதுகாப்பு பகுதிகள் அதிகமாக அமைக்கப்பட்டும் அதில் செயல்படுத்தப்படவில்லை.

6 ஆண்டுகளாக மூடிகிடக்கிறது

புதிய பன்னாட்டு முனைய வருகை பகுதியில் பயணிகள் வெளியே செல்ல 4 நுழைவு வாயில்களும், வாகனங்கள் தடையின்றி வெளியேறவும், வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளை வரவேற்க வரும் உறவினர்கள் நிற்க கூடிய பகுதிகளும் என அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக பன்னாட்டு முனைய வருகை பகுதி செயல்படாமல் மூடியே கிடக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட முனையம், இன்னும் திறக்கப்படாமல் அப்படியே வீணாக மூடி இருக்கிறது. இதனால் பழைய முனையம் வழியாக வெளியே வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

திறக்க கோரிக்கை

எனவே 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பன்னாட்டு முனைய வருகை பகுதியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “பன்னாட்டு பழைய முனையத்தில் பயணிகளின் உடமைகளை எடுக்கும் பட்டை (கன்வேயர் பெல்ட்) 6 எண்ணிக்கை உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்தாலும் உடனடியாக உடமைகளை வெளியேற்ற முடியும். ஆனால் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னாட்டு முனைய வருகை பகுதியில் 3 கன்வேயர் பெல்ட்தான் உள்ளன. இதனால் விமானங்கள் அதிகமாக வந்தால் பயணிகளின் உடமைகள் எடுக்க காலதாமதம் ஏற்படும் என்பதால் பழைய முனையத்தில் செயல்படுகிறது” என்றனர். 

Next Story