கோவையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஊட்டியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபர் கைது


கோவையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஊட்டியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 March 2018 11:00 PM GMT (Updated: 4 March 2018 6:42 PM GMT)

கோவையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஊட்டியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே சாலையோரம் உள்ள ஒரு கடையில், நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை வாங்கி சென்றார். அவர் சென்ற பின்னர் தான் கடையில் இருந்த பெண்ணுக்கு தான் வாங்கிய நோட்டு கள்ள ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது. உடனே அந்த பெண் ஊட்டி நகர மத்திய போலீசாருக்கு புகார் தெரிவித்ததுடன், கள்ள ரூபாய் நோட்டையும் போலீசாரிடம் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊட்டியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்ததில், அவர் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

கோவை செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 26) என்பதும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அருகே உள்ள சாலையோரக் கடைகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றியதும் விசாரணைக்கு பின்னர் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் பிரகாசை குன்னூர் வழியாக கோவை செட்டிப்பாளையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் நகல் எடுத்து நூதன முறையில் கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

அதன் பின்னர் பிரகாசிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகள் 14-ம், 500 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகள் 18-ம், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து ரொக்கம் ரூ.7 ஆயிரத்து 200-ஐ போலீசார் கைப்பற்றினர். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பிரகாஷ் கோவையில் பி.காம் படிப்பை பாதியில் கைவிட்டவர். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் கோவையில் ஏலச்சீட்டு மற்றும் ஓட்டல் நடத்தி வந்தார். அவருக்கு ஏலச்சீட்டு, ஓட்டல் மூலம் சரியான லாபம் கிடைக்கவில்லை. இதற்காக பிரகாசுக்கு ரூ.50 லட்சம் கடன் உள்ளதாக கூறப்படு கிறது. அந்த வேளையில் அவரது ஓட்டலுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கள்ள ரூபாய் நோட்டு எதிர்பாராதவிதமாக வந்தது. இந்த கள்ள நோட்டை அவர் மற்ற ஒரு கடையில் கொடுத்து மாற்றி விட்டார். கள்ள நோட்டை எளிதாக மாற்றி விட்டதால், கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

இதையடுத்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான புதிய கலர் ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் வெட்டும் எந்திரத்தை விலைக்கு வாங்கினார். வீட்டில் இருந்தே உண்மையான ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளை வைத்து ஏ4 தாள்களை வைத்து கலர் ஜெராக்ஸ்கள் எடுத்தார். அதனை அளவு மாறாமல் வெட்டி சேகரித்து ஊட்டியில் புழக்கத்தில் விட்டார். அப்போது போலீசாரிடம் சிக்கி கொண்டார். இதுபோன்ற செயலை அவர் தொடங்கிய ஒரு வாரத்திலேயே போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

ஊட்டியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கோவை வாலிபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story