சி.பி.ஐ. விசாரணை கோரி அறப்போர் இயக்கம் ஆர்ப்பாட்டம்


சி.பி.ஐ. விசாரணை கோரி அறப்போர் இயக்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 March 2018 10:45 PM GMT (Updated: 4 March 2018 7:19 PM GMT)

நிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அறப்போர் இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் உசேன், பொருளாளர் நக்கீரன், மாநிலக்குழு உறுப்பினர் சுபத்ரா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்தபடி அறப்போர் இயக்கத்தினர், தன்னார்வ தொண்டர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஜெயராம் வெங்கடேசன் பேசியதாவது:-

2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை மின்சார தயாரிப்புக்காக நிலக்கரி வாங்கியதில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. சந்தை மதிப்பைவிட அதிகமாக விலைக்கு வாங்கியதில், ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். கொள்முதல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மின்வாரியம் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். ஊழல் ஒழிப்பு சட்டமான லோக் அயுக்தா சட்டத்தை தமிழகத்தில் தாமதமின்றி கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது ஆடல்-பாடல் மற்றும் தப்பாட்டம் போன்ற நிகழ்வுகளால் நிலக்கரி ஊழல் குறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Next Story