கீரனூர் அருகே குளத்தூரில் ஜல்லிக்கட்டு; 18 பேர் காயம்


கீரனூர் அருகே குளத்தூரில் ஜல்லிக்கட்டு; 18 பேர் காயம்
x
தினத்தந்தி 4 March 2018 11:00 PM GMT (Updated: 4 March 2018 7:50 PM GMT)

கீரனூர் அருகே குளத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குளத்தூரில் அய்யனார்கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி கிராமமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 268 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு துள்ளிக்குதித்து ஓடி வந்த காளைகளை அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 687 காளைகள் கலந்து கொண்டன.

காளைகள் முட்டித்தள்ளியதில் மாடுபிடிவீரர்கள் காமராஜ் (வயது 21), வரதாஜ் (20), காசி (40), சங்கரன்ங (42), பார்வையாளர்கள் ஆரோக்கியம் (60), நல்லையா (61) உள்பட 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு வாடிவசாலில் தயார்நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், ஆட்டுக்குட்டிகள், குக்கர், செல்போன், சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசுகள், கட்டில், பீரோ, ரொக்கப்பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு, தி.மு.க. வடக்கு மாவட்ட பொருப்பாளர் செல்லப்பாண்டியன், டி.வி.வி.தினகரன் அணி கார்த்திக்பிரபாகரன், குளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் கீரனூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

Next Story