மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 5 March 2018 4:00 AM IST (Updated: 5 March 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலை, ‘பெண்களின் சபரிமலை‘ என்றும் அழைப்பார்கள். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலில் மாசி திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழா வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், தீபாராதனை நடந்தது. பின்னர் மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், இடைக்கோடு தந்திரி மகாதேவரு அய்யர் கொடி ஏற்றி வைத்தார்.பிறகு பூஜைகள் நடந்தன.

நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பிரின்ஸ் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுகதரன், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் என்ஜீனியர் அய்யப்பன், மண்டைக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, பா.ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி, மேல்சாந்தி சட்டநாத குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சமய மாநாடு கொடியேற்றத்துடன் நடந்தது. ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் மாநாடு கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டை ஸ்ரீமத் சுவாமி தியாகராஜாநந்தஜி மகராஜ் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கு ஏற்றி பேசினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

விழாவையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மதியம் உச்சிகால பூஜையும், அன்னதானமும் நடந்தது. மாலையில் ராஜராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தீபாராதனை, உச்சிகால பூஜை, அம்மன் பவனி வருதல், அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.

வருகிற 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும், 12-ந் தேதி இரவு 10 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலமும் நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 13-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி நடைபெறும். திருவிழாவையொட்டி கோவிலை சுற்றிலும், கடற்கரையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story