குமரி மாவட்டத்தில் 100 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் கலெக்டர் வழங்கினார்


குமரி மாவட்டத்தில் 100 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 4 March 2018 11:00 PM GMT (Updated: 4 March 2018 8:16 PM GMT)

குமரி மாவட்டத்தில் 100 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டரை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

நாகர்கோவில்,

வேலைக்கு செல்லும் பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். இது தற்போது “அம்மா இருசக்கர வாகன திட்டம்“ என்ற பெயரில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

மானிய விலை ஸ்கூட்டர் பெற தமிழகம் முழுவதும் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து தகுதியான நபர்களுக்கு ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி முதல் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற 12 ஆயிரத்து 259 பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட அளவிலான தேர்வுக்குழு ஒப்புதல் பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளை சேர்ந்த 25 பெண்களுக்கும், பேரூராட்சிகளில் வசிக்கும் 55 பெண்களுக்கும் மற்றும் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 20 பெண்களுக்கும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 100 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு மானிய விலை ஸ்கூட்டரை வழங்கி, மானியம் பெறுவதற்கான ஆணையை பெண்களுக்கு வழங்கினார். விழாவில் விஜயகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி மானிய விலை ஸ்கூட்டர் பெறும் பெண்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் நேற்று விடுமுறை தினம் எனினும் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story