ரூ.33½ லட்சம் மானியத்தில் 134 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள்


ரூ.33½ லட்சம் மானியத்தில் 134 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள்
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 134 பெண்களுக்கு ரூ.33½ லட்சம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினார்கள்.

ஈரோடு,

அம்மா இருசக்கர வாகனங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 24-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மானியம் கேட்டு விண்ணப்பித்த பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்களுக்கான சாவிகளை வழங்கி பேசினார்கள்.

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார். அவர் அறிவித்த திட்டங்கள் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் வீடுகள் இல்லாதவர்கள் பயன்அடைவார்கள்.

மேலும், வீடுகள் கட்டி கொடுக்க முடியாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பட்டா உடையவர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கும் புதிய திட்டமும் உள்ளது. இந்த ஆட்சி 100 ஆண்டுகள் நிலைக்கும். எனவே அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

விழாவில் 134 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வீதம் மொத்தம் ரூ.33 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இதில் திருப்பூர் சத்தியபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன், முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிசந்திரன், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் மண்டல தலைவர் மனோகரன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கோவிந்தராஜ், ஜெயராஜ், முருகுசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். முடிவில் உதவி திட்ட அதிகாரி சாந்தா நன்றி கூறினார்.

Next Story