துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்ட இடம் தேர்வு: எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு பொதுமக்கள் போராட்டம்


துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்ட இடம் தேர்வு: எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2018 4:30 AM IST (Updated: 6 March 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

துப்புரவு பணியாளர் களுக்கு வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பொதுமக்கள், பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் அருகே எஸ்.வெள்ளாளப்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 120-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு முன்பாக மைதானம் போன்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 632 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ.55 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் வீடு கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று அந்த மைதானத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பொதுமக்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் தங்களுக்கு ஏற்கனவே விளையாட்டு மைதானம் என்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வர இருப்பதாகவும் தெரிவித்து ஒதுக்கப்பட்ட இடமாகும். இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் படியும் அதன்பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கும், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனுக்கள் அளிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story