‘அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன் இணைந்து செயல்படவில்லை’ டி.டி.வி. தினகரன் பேட்டி


‘அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன் இணைந்து செயல்படவில்லை’ டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2018 4:45 AM IST (Updated: 6 March 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

‘அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன் இணைந்து நாங்கள் செயல்படவில்லை’ என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நேற்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறேன். அடுத்ததாக திருப்பூருக்கு செல்ல உள்ளேன். இதையடுத்து அடுத்த சுற்று திருவண்ணாமலைக்கு வரஉள்ளேன். 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் போடப்பட்ட வழக்கும் உள்ளது. தகுதி நீக்க வழக்கின் முடிவு வந்த பிறகு ஆட்சி மாற்றம் வரும்.

வெற்றிவேல் சொன்ன குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றால், உண்மை இல்லை என்று மறுக்க வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு அவன், இவன் என்று பேசுவது, ஒருமையில் பேசுவது எல்லாம் அந்த பதவிக்கு அழகு இல்லை.

ஒரு தினகரனையே ஆர்.கே.நகர் தேர்தலில் அவர்களால் சந்திக்க முடியவில்லை. 234 தினகரன் வருகிற தேர்தலில் வருவார்கள். அவர்களை முதலில் சந்திக்கட்டும். கமலின் குற்றசாட்டை எல்லாம் நாம் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தேர்தல் வரும், மக்கள் அதற்கு பதில் சொல்வார்கள்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எனது தங்கை கைது செய்யப்பட்டு உள்ளதற்கும், எனது அரசியல் பயணத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது. அவர், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்.

எனது அணியில் 2 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் நிச்சயம் தமிழகத்தின் நலனை கருதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அழுத்தம் கொடுக்க எல்லோரும் எடுக்கும் முடிவுபடி அவர்களும் செயல்படுவார்கள்.

ஜெயலலிதா பிறந்த நாளன்று அவசர, அவசரமாக ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டது. அது ஜெயலலிதா சிலை போன்று இல்லை. இது எடப்பாடி அம்மா சிலையா?, ஓ.பன்னீர்செல்வம் அம்மா சிலையா? என்று கேள்வி எழுப்பினேன். இதனையடுத்து சிலையின் முகத்தை திருத்திவிடலாம் என்று கூறுகின்றனர். எனக்கு தெரிந்தது வரை அந்த சிலையை திருத்த முடியாது. வேறு சிலை தான் வைக்க வேண்டும்.

நிச்சயம் ஆட்சியும், கட்சியும் நமது கைக்கு வரும். அப்போது சின்ன குழந்தை பார்த்தால் கூட அது ஜெயலலிதா சிலை என்று கூறும் வகையில் நல்ல சிலையை நிதானமாக அந்த இடத்தில் நிறுவுவோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகள் அகற்றப்பட்டு உள்ளன. அது ஆளும் கட்சியின் பொறுப்பின்மையை காட்டுகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரசியலில் பெரிய வெற்றிடம் உள்ளதாக நினைத்து நிறைய பேர் சடு குடு விளையாடலாம் என்று வருகின்றனர். இதற்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். எங்களை பொறுத்தவரை எப்பொழுது தேர்தல் வந்தாலும் நாங்கள் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். யாருடை வருகையும் எங்களுடைய வெற்றியை நிச்சயம் பாதிக்காது.

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லை. எனது சிலிப்பர் செல்களின் நடவடிக்கை ஓட்டெடுப்பின் போது தான் தெரியவரும். இந்த ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன் நாங்கள் இணைந்து செயல்படவில்லை. என்னை பொறுத்தவரையில் இது ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல. துரோக ஆட்சி என்று முடிவு எடுத்து நான் செயல்படுகிறேன்.

எங்களின் எம்.எல்.ஏ.க்கள் உடன் தி.மு.க.வும் இணைந்து வாக்களித்தால் ஆட்சி கலையும் என்பது எதார்த்த உண்மை. எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் மறைமுக கூட்டணி இல்லை. நாங்கள் யாருடன் வைத்தாலும் நேரடி கூட்டணி தான் வைப்போம். தேர்தல் நேரத்தில் பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story