தமிழக அரசு முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சாரம், கேரள மந்திரி பேட்டி


தமிழக அரசு முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சாரம், கேரள மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 6 March 2018 3:30 AM IST (Updated: 6 March 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மின்சாரத்துறை மந்திரி கூறினார்.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கேரள மின்சாரத்துறை மந்திரி எம்.எம்.மணி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக-கேரள மக்கள், என்றும் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். பாரதத்தில் வாழும் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் உறவினர்கள். எனவே தமிழக-மலையாள மக்கள் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக உள்ளது. கேரளாவையொட்டி தமிழகம் உள்ளதால் தமிழ், மலையாள மொழிக்கும் உறவு உள்ளது. எனவே அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திரிபுரா மாநில தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- ஜனநாயகம், பணநாயகமாக மாறிவிட்டது. 35 சதவீதம் வாக்கு வங்கி உள்ள காங்கிரஸ் பணத்திற்காக விலை போகிவிட்டது. இதேபோல் இதர கட்சிகளையும் பா.ஜ.க. அரசு விலைக்கு வாங்கிவிட்டது. சிறப்பாக ஆட்சி செய்த திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் எளிமையானவர். அரசு அலுவலகங்களுக்கு நடந்து சென்று மக்களுக்காக உழைத்த எளிமையான முதல்வரை பா.ஜ.க. பணநாயகத்தின் மூலம் வீழ்த்திவிட்டனர்.

கேள்வி:- தேனியில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படுமா?

பதில்:- தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ திட்டத்தை பற்றி முழுமையாக தெரியாமல் நான் கருத்து கூற விரும்பவில்லை.

கேள்வி:- நியூட்ரினோ திட்டத்தினால் தமிழக, கேரள மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்படும் என சிலர் கூறுகின்றார்களே?

பதில்:- நியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கேரள அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளது.

கேள்வி:- முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை எந்த நிலையில் உள்ளது?

பதில்:- முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது உச்சநீதிமன்ற தீர்ப்பை அனுசரித்து செல்வதே நல்லது. புதிய வழி பிறக்க வேண்டும் என்றால் இரு மாநில அரசும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கேரள அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்காது.

கேள்வி:- முல்லைப்பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கு காலம் தாழ்த்துவது ஏன் ?

பதில்:- இதுகுறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. தமிழக அரசு முறையான ஆவணங்களை கேரள அரசிடம் சமர்ப்பித்தால் அதன் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். 

Next Story