முல்லுண்டில் கழிவுநீரோடையில் கிடந்த 4 அடி நீள முதலை


முல்லுண்டில் கழிவுநீரோடையில் கிடந்த 4 அடி நீள முதலை
x
தினத்தந்தி 6 March 2018 4:42 AM IST (Updated: 6 March 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

4 அடி நீள முதலை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிக்கியது.

மும்பை,

முல்லுண்டில், கழிவு நீரோடையில் கிடந்த 4 அடி நீள முதலை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.

மும்பை முல்லுண்டில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் அருகே கழிவுநீரோடை உள்ளது. இந்த நீரோடையில் நேற்றுமுன்தினம் மாலை முதலை ஒன்று நீந்துவதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி வன உயிரின நலச்சங்கம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் முதலையை பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால் உடனடியாக அந்த முதலையை அவர்களால் பிடிக்க முடியவில்லை. கழிவுநீரோடைக்குள் அங்கும், இங்குமாக வேகமாக நீந்திய அந்த முதலை பிடிபடாமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக டிமிக்கி கொடுத்தது.

சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த முதலை வனத்துறையினர் போட்டிருந்த வலையில் சிக்கியது. இதையடுத்து அந்த முதலையை கழிவுநீரோடைக்குள் இருந்து வெளியே எடுத்தனர்.

பின்னர் வலையில் சிக்கியிருந்த அந்த முதலையை லாவகமாக பிடித்து அதன் வாயில் கட்டுப்போட்டனர். பிடிபட்டது ஆண் முதலை என்பது தெரியவந்தது. அந்த முதலை 4.4 அடி நீளம் கொண்டதாகவும், 8 கிலோ 800 கிராம் எடை கொண்டதாகவும் இருந்தது.

அந்த முதலை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் உள்ள துல்சி அல்லது விகார் ஏரியில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் அந்த முதலையை ஏரியில் விடுவதற்காக வனத்துறையினர் தூக்கிச்சென்றனர்.

கழிவுநீரோடையில் முதலை பிடிபட்ட சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர்.

Next Story