மராட்டிய சட்டசபையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ்


மராட்டிய சட்டசபையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ்
x
தினத்தந்தி 5 March 2018 11:38 PM GMT (Updated: 5 March 2018 11:38 PM GMT)

மராட்டிய சட்டசபையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் கொடுத்தனர்.

மும்பை,

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி சட்டசபையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கவர்னரின் உரை குறித்து எந்த விவாதமும் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் உரைக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பதில் அளிக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுபோன்ற விஷயங்களில் சபாநாயகர் ஹரிபாவு பாக்டே ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்து நேற்று நோட்டீசும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 24 பேர் கையெழுத்திட்டு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் எழுப்ப அனுமதிப்பதே சபாநாயகரின் முக்கிய கடமையாகும். சட்டசபைக்கு தான் அவர் சபாநாயகரே தவிர அங்குள்ள மேஜைகளுக்கு அல்ல. சட்ட வரைமுறைகளுக்கு எதிராக ஆளும் கட்சியினர் விவாதத்தில் இருந்து தப்பிச்செல்ல சபாநாயகர் ஹரிபாவு பாக்டே ஒவ்வொரு முறையும் உதவி செய்துகொண்டே இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் கூறுகையில், “எதிர்க்கட்சியினர் கவர்னரின் உரை குறித்து விவாதம் நடத்த தயாராக இருந்தன. ஆனால் சபாநாயகர் ஹரிபாவு பாக்டே எந்த வித விவாதமும் இல்லாமல், முதல்-மந்திரியின் பதிலும் இல்லாமல் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்” என்றார்.

Next Story