மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு


மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 6 March 2018 5:16 AM IST (Updated: 6 March 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்குகுளி தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து மற்றும் சிலர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்குகுளி தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு வருவாய் தேடி தருகிறார்கள். அவர்களுக்காக தமிழக அரசு மீன்துறை அலுவலகம் கட்டி தந்து, குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கு குளிக்கும் முதியவர்களை கவுரவிக்கும் வகையில் அரசு நற்சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருங்குளம் ஒன்றிய குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாலுகா செய்துங்கநல்லூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 135 பேருக்கு அந்த பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை சர்வே செய்து மனைகள் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை பிரித்து வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் சார்பில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் தனிநபருக்கு பாத்தியப்பட்ட இடங்களில் உள்ள தி.மு.க. கொடி கம்பங்களை குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 133-ன்படி அகற்ற வேண்டும் என்று, தூத்துக்குடி உதவி கலெக்டர் உத்தரவிட்டார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைத்துறை, அரசு புறம்போக்கு இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டு உள்ள அ.தி.மு.க. கொடி கம்பங்களை அதே சட்ட விதிமுறை உத்தரவின்படி உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஓட்டப்பிடாரம் தாலுகா அக்காநாயக்கன்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள விவசாயிகள் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2016-17-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்து இருந்தோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தவித பயிர் காப்பீடு தொகையும் வழங்கப்படவில்லை. 2016-17-ம் ஆண்டு போதிய விளைச்சல் இல்லாததால் நாங்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க உதவ வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க செயலாளர் சுந்தர்ராஜ் கொடுத்த மனுவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் மேம்பாடு செய்யப்பட்ட தூத்துக்குடி சங்கரப்பேரி நகர்ப்புற வளர்ச்சி திட்டப்பகுதி, சங்கரப்பேரி மனை மேம்பாட்டு திட்டப்பகுதி, சங்கரப்பேரி சிறிய, நடுத்தர நகரமைப்பு திட்டப்பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், சாலைகள் முழுமையாக சேதமடைந்து உள்ளன. அந்த வழியாக பள்ளி செல்லும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். ஆகவே அந்த பகுதி சாலைகளை சீரமைக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் தேவராஜ் மற்றும் கட்சியினர் கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் உள்ள ஏரல் தாமிரபரணி ஆற்று மேம்பாலத்தில், இரவு நேரங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் செல்வதற்கு மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும். மேலும் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் உள்ள தார்சாலைகள் 10 வருடங்களாக சேதமடைந்த நிலையில் மோசமாக இருக்கின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ- மாணவிகள் சிரமப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்புலிகள் கட்சி ஒருங்கிணைப்பில் தூத்துக்குடி செல்வநாயகபுரம் டி.எம்.சி. காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், இந்த பகுதியில் சுமார் 60 ஆண்டுகளாக 272 குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது நாங்கள் இருக்கும் இடத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவ வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதேபோல் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் வசித்து வரும் தனலட்சுமி, செல்வி, முருகேசுவரி, சூர்யா, குணசீலி, கார்த்திகேயன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், நாங்கள் 20 ஆண்டுகளாக இதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் சொந்த வீடு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Next Story