சட்டசபையில் அமளி தனஞ்செய் முண்டே மீது விசாரணை முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு


சட்டசபையில் அமளி தனஞ்செய் முண்டே மீது விசாரணை முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 March 2018 11:57 PM GMT (Updated: 5 March 2018 11:57 PM GMT)

சட்டசபையில் அமளி தனஞ்செய் முண்டே மீது சட்டமன்ற குழு விசாரணை முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு.

மும்பை,

ஆடியோ புகார் குறித்து தனஞ்செய் முண்டே மீது சட்டமன்ற குழு விசாரணை நடத்த இருப்பதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் (தேசியவாத காங்கிரஸ்) தனஞ்செய் முண்டே குறித்து சமீபத்தில் மராத்தி செய்தி சேனல் ஒன்று ஆடியோ வெளியிட்டது. அதில், மேல்-சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை முடக்கிய பிரச்சினையில் லஞ்ச பேரம் பேசுவது குறித்து பதிவாகியிருந்தது. பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய, இந்த ஆடியோ பிரச்சினையை எதிர்க்கட்சிகள் நேற்று சட்டசபையில் கையில் எடுத்தன. தனஞ்செய் முண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமாக கருதுவதாகவும், சட்டசபை உறுப்பினர்களின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். எனவே இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்த சட்டசபை குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும், இந்த சட்டசபை குழுவில் சபாநாயகர், மேல்-சபை தலைவர், இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அறிவித்தார்.

ராணுவ வீரர்களின் மனைவிமார்கள் குறித்து விமர்சனம் செய்த பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி. பரிச்சரக் கடந்த ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவரது இடைநீக்கம் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சினையும் நேற்று சட்டசபையில் எதிரொலித் தது. குறிப்பாக ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா உறுப்பினர்கள் பரிச்சரக் எம்.எல்.சி.யின் இடைநீக்க ரத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

மேலும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதத்துக்கு விடப்படாததை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. இந்த பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளால் சட்டசபை நடவடிக்கை நேற்று ஸ்தம்பித்தது. இதையடுத்து நாள் முழுவதும் சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Next Story