திருப்பரங்குன்றம் தாலுகாவில் பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற மாதக்கணக்கில் அலைக்கழிப்பு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


திருப்பரங்குன்றம் தாலுகாவில் பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற மாதக்கணக்கில் அலைக்கழிப்பு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 March 2018 3:15 AM IST (Updated: 7 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் தாலுகாவில், பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் திருப்பரங்குன்றம் திருநகர் ஹார்விப்பட்டி, பசுமலை, தியாகராஜர்காலனியும், மாடக்குளம் கிராம நிர்வாக அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் ஜெய்ஹிந்து புரம், சோலையழகுபுரம், பழங்காநத்தம் என்று மதுரை மாநகர் எல்லை பகுதியும் அமைந்துள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் படிப்புக்கான வருமானம், இருப்பிடம், சாதி, ஓ.பி.சி. சான்றிதழ்கள் பெற இ.சேவை மையங்களுக்கு சென்று அதற்கான கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர்.

அவற்றை முதலில் கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து, வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பி, அதை அவர் பார்த்து கையெழுத்திட்டு தாசில்தார் பார்வைக்கு அனுப்புகிறார். அதில் தாசில்தார் அல்லது மண்டல துணை தாசில்தார் கையெழுத்து போடுவார். அதைத்தொடர்ந்து மனுதாரரின் செல்போனில் தகவல் தரப்பட்டு, அவர் இ.சேவை மையத்திற்கு சென்று சான்றிதழை பெற்றுக் கொள்வார். இதற்காக குறைந்தபட்சம் ஒருவாரம் ஆகும்.

ஆனால் தற்போது இந்த சான்றிதழ்களை பெறுவதற்கு மாதக்கணக்கில் ஆகிறது. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதேபோல வாரிசு சான்றிதழ்கள் பெறுவதிலும் பொதுமக்கள் மாதக்கணக்கில் அலைந்து வருகின்றனர். இதுகுறித்து சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் கூறும் போது, சான்றிதழ் குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டால், தன்னிடம் கையெழுத்து போட்டு வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பியாச்சு, அங்கே போய் பாருங்கள் என்கிறார். அவரை பார்த்தால் தானும் கையெழுத்து போட்டு தாசில்தார் பார்வைக்கு அனுப்பியாச்சு என்கிறார். தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றால் சர்வர் சரிவர செயல்படவில்லை என்று கூறி அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள் என்றனர்.

திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ராஜு கூறியதாவது:- முன்பெல்லாம் வருமானம், இருப்பிட சான்றிதழ்கள் குறைந்தபட்சமாக 2 நாளில் பெற்று விடுவோம் ஆனால் தற்போது ஆன்லைனில் பதிவு செய்து குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு மேலாகி விடுகிறது. நிரந்தர சாதி, ஓ.பி.சி.சான்றிதழ்கள் பெறுவதில் மாணவ-மாணவிகள், பொதுமக்களை மாதக்கணக்கில் அலைய விடுகிறார்கள்.

வருமான சான்றிதழ் ஒரு ஆண்டிற்கு உகந்தது என்ற போதிலும் அதை பெற 2 மாதமாகிவிடுகிறது. அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்த வாரிசு சான்றிதழ்கள் பெறுவதற்காக மனு கொடுத்த போதிலும் பல மாதங்கள் இழுத்தடிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் பதிவால் உடனுக்கு உடன் சான்றிதழ்கள் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறிய பாடில்லை. மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதில் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Next Story