பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு


பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு
x
தினத்தந்தி 7 March 2018 4:30 AM IST (Updated: 7 March 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை,

பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்து உள்ளார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, மாணவரணி அமைப்பாளர் மனோஜ், ஆனந்தன் ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். பின்னர் கு.ராமகிருட்டிணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு அவர்கள் பதவி ஏற்கும் முன்பே அங்கிருந்த கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தலைவர் லெனின் சிலையை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர். இதற்கு கம்யூனிஸ்டு கட்சியினர் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். இது தமிழக மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தமிழகத்தில் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இது போன்ற கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். தமிழக அரசு பெரியாரின் பெயரில் விருது வழங்கி வருகிறது. எனவே பெரியாரை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவு செய்துள்ள எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர் மன்னிப்பு கேட்கும் வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story