பா.ஜ.க.வுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும், ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்


பா.ஜ.க.வுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும், ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 March 2018 4:15 AM IST (Updated: 7 March 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு,

ம.தி.மு.க.வின் 26-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* தி.மு.க.வுடன் நட்பும், தோழமையும் தொடரும்.

* நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், வருகிற 31-ந்தேதி காலை 9 மணி அளவில், மதுரை மாநகரில் இருந்து வைகோ தலைமையில் நடைபயணம் தொடங்கி, ஏப்ரல் 10-ந்தேதி அன்று நிறைவு செய்யப்படும்.

* சென்னை மூலக்கொத்தளம் மயானத்தை அகற்ற விடாமல் தடுக்க, ம.தி.மு.க. சார்பில் வருகிற 13-ந்தேதி, 10 மணியளவில் வைகோ தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

* மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை, தமிழகம் கிளர்ந்து எழுந்து போராட வேண்டும்.

* தமிழக அரசு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று, தமிழ்மொழியை சென்னை ஐகோர்ட்டு வழக்காடு மொழி ஆக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* சமஸ்கிருதம், இந்தி மொழிகளை வலிந்து கட்டாயமாகத் திணிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு 1965 மொழி உரிமைப் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

* இந்தியாவில் 75 சதவீதம் நிலப்பரப்பில் ‘காவி’ படர்ந்து விட்டது. நாடே எங்கள் கையில் என்று ஆதிக்க வெறியுடன் பேசி வரும் பா.ஜ.க.வின் ஆணவக் கொட்டத்தை அடக்கி, ஜனநாயகத்தையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க, வேறுபாடுகளை மறந்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும்.

* இந்தியாவின் கூட்டு ஆட்சித் தன்மையைச் சீர்குலைக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

* இலங்கையில் தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. மன்றம் முன் வரவேண்டும்.

* சிரியாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை இந்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.

* கெயில் எரிவாயுக் குழாய்களை விவசாய நிலங்களில் பதிக்கக் கூடாது.

* பெரியார், அண்ணா என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் 3 அடுக்கு பேச்சுப் போட்டி தமிழகம் முழுவதும் ம.தி.மு.க.மாணவர் அணி சார்பில் நடத்தப்படும்.

மேற்கண்டவை உள்பட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story