விழுப்புரத்தில், 15 நாட்களுக்குள் ரெயில்வே மேம்பாலத்தை திறக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம்


விழுப்புரத்தில், 15 நாட்களுக்குள் ரெயில்வே மேம்பாலத்தை திறக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2018 10:30 PM GMT (Updated: 6 March 2018 7:55 PM GMT)

விழுப்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தை 15 நாட்களுக்குள் திறக்காவிடில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் கட்டி முடிக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்கக்கோரியும், 40 ஆண்டுகால கோரிக்கையான காய்கறி மார்க்கெட்டுக்கென தனி இடம் ஒதுக்கித்தராத நகராட்சியை கண்டித்தும், வீடுகளுக்கும், கடைகளுக்கும் தன்னிச்சையாக சொத்துவரி, தொழில்வரி மாற்றி அமைக்கும் நகராட்சியின் முறையற்ற செயலை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் விழுப்புரம் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கி பேசியதாவது:-

விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுகிற பணி 6 ஆண்டுகளாக சுணக்கத்துடன் நடந்து வருகிறது. மேம்பாலம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை 1,000-க்கும் மேற்பட்ட வணிக குடும்பங்கள் அந்த வணிகத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர விழுப்புரம் நகரில் இரவு 1 மணிக்கு மீன் மார்க்கெட் நடந்து வருகிறது. மீன் மார்க்கெட் இடத்தை மாற்றித்தருகிறோம் என்று நகராட்சி கொடுத்த வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் இடப்பற்றாக்குறையினால் தடுமாறி கொண்டிருக்கிறது. சாலையோர கடைகளுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அந்த உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் வகையில், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம் என்ற நகராட்சியின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களுடைய இந்த போராட்டத்தை அலட்சியமாக எண்ணி விடாதீர்கள். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக இதுபோன்ற போராட்டங்களை எடுத்துச்செல்வோம். விழுப்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தை 15 நாட்களுக்குள் திறக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நகரில் அனைத்து கடைகளையும் அடைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். தேவைப்பட்டால் மாவட்டம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story