உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் நெற்றியில் நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்


உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் நெற்றியில் நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்
x
தினத்தந்தி 7 March 2018 4:15 AM IST (Updated: 7 March 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் நேற்று நெற்றியில் நாமம் போட்டு கையில் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை,

உடுமலை நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டனுக்கு உடுமலை நகராட்சியிலேயே பணி பொறுப்புகள் வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட குழாய் பொருத்துனர் செல்வக்குமாரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் சுவரில் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த சுவரொட்டி ஒட்டியதற்கு நகராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரை நகராட்சி அதிகாரி தாக்கியதாகவும், அவர் மீதும், அப்போதைய நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப்போராட்டத்தை கடந்த 1-ந்தேதி தொடங்கினார்கள்.

அவர்கள் நேற்று தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்கத்தினர் கைகளில் சட்டி ஏந்தி நெற்றியில் நாமம் போட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

நேற்று மாலை சத்துணவு அமைப்பாளர்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். முழக்கப்போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. 

Next Story