வாலிபரை கொன்று குடலை மாலையாக போட்டிருந்த வழக்கு: மதுரையை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை


வாலிபரை கொன்று குடலை மாலையாக போட்டிருந்த வழக்கு: மதுரையை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 6 March 2018 10:15 PM GMT (Updated: 6 March 2018 8:05 PM GMT)

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்து, அவரது குடலை மாலையாக போட்டிருந்த வழக்கில் மதுரையை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.

திருச்சி,

மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் விக்னேஷ்குமார் (வயது23). இவர் சொந்த வேலையாக கடந்த 20.3.2016 அன்று திருச்சி வந்தார். பின்னர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். இதே போன்று திருச்சி உறையூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் வெள்ளைபாண்டி (28). இவரும் அதே விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் இருவரும் அவர்கள் தங்கி இருந்த விடுதிக்கு சென்றனர்.

இந்த நிலையில் ஆத்திரத்தில் இருந்த விக்னேஷ்குமார், பீர் பாட்டிலால் விடுதி அறையில் தங்கி இருந்த வெள்ளைபாண்டியை குத்தினார். மேலும் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் வெள்ளைபாண்டியின் வயிற்றில் குத்தினார். இதில் குடல் சரிந்த வெள்ளைபாண்டி துடி, துடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது சரிந்து கிடந்த குடலை எடுத்து வெள்ளைபாண்டியின் கழுத்தில் மாலையாக போட்டு விட்டு, பிணத்தின் அருகிலேயே விக்னேஷ்குமார் படுத்துக்கொண்டு வெறி பிடித்தது போல் கத்தினார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அலறினர். பின்னர் இது குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷ்குமாரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு, குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

Next Story