கன்னங்குறிச்சி போலீஸ் ஏட்டு அதிரடியாக இடமாற்றம்


கன்னங்குறிச்சி போலீஸ் ஏட்டு அதிரடியாக இடமாற்றம்
x
தினத்தந்தி 7 March 2018 4:45 AM IST (Updated: 7 March 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

கன்னங்குறிச்சி போலீஸ் ஏட்டு அதிரடியாக இடமாற்றம் கமிஷனர் சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கன்னங்குறிச்சி,

சேலத்தில் வாலிபர்களை மிரட்டி மதுபாட்டில் பெற்ற கன்னங்குறிச்சி போலீஸ் ஏட்டை அதிரடியாக இடமாற்றம் செய்து கமிஷனர் சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முத்துகுமரேசன் (வயது 50) என்பவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் செட்டிச்சாவடி ஜீவா நகர் பகுதியில் ரோந்து மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுஇடத்தில் வைத்து 3 வாலிபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த முத்துகுமரேசன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அவர்கள் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

அந்த வாலிபர்களிடம் ஏன்? பொது இடத்தில் அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என கேட்டதுடன், உங்கள் மேல் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கு ஒரு ‘ஆப்‘ மதுபாட்டில் வாங்கி வரவேண்டும் என அவர்களுக்கு கட்டளையிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரில் ஒருவர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றார்.

சிறிது நேரம் சென்ற பின்பு அந்த வாலிபர் ஒரு குவாட்டார் மதுபாட்டில் வாங்கி வந்து முத்துகுமரேசனிடம் வழங்கினார். மதுபாட்டிலை பெற்றுக்கொண்ட அவர் இதை வாங்கி வர இவ்வளவு நேரமா எனவும்?, உங்களுக்கு எல்லாம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். செல்வம் என்பவர் தான் உங்களை சும்மா விட்டு விடாமல் மாமூல் வாங்க சொன்னார், நான்தான் எப்படியும் மாலையில் ரூ.200-க்கு குவாட்டர் வாங்கி குடிக்கபோறோம், எனவே தான் அதனை வாங்கி வர சொன்னேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இனிமேல் இந்த இடத்தில் மது குடிக்க கூடாது என அந்த வாலிபர்களிடம் கூறி விட்டு, அவர்கள் கொடுத்த மதுபாட்டிலுடன் அங்கிருந்து முத்துகுமரேசன் சென்று விட்டார். இதனிடையே அந்த வாலிபர்கள் முத்துகுமரேசனிடம், மது பாட்டில் கொடுப்பதை எப்படியோ ரகசியமாக வீடியோவாக எடுத்து விட்டனர்.

இந்த வீடியோ காட்சி வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் முத்துகுமரேசன் மீது விசாரணை நடத்த தொடங்கினார். இந்த நிலையில் முத்துகுமரேசனை கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து இரும்பாலை போலீஸ் நிலையத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். முத்துகுமரேசன் குறிப்பிடும் செல்வம் என்பவர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வருவதும், அவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரவுடி சசீந்திரன் பிறந்தநாளுக்கு கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கேக் ஊட்டிய விவகாரம் முடிவுக்கு வரும் முன்பே, அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு முத்துகுமரேசன் வாலிபர்களிடம் மதுபாட்டில் வாங்கியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story