நெல்லுக்கு கூடுதல் விலை வழங்க கோரி விருத்தாசலத்தில், 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


நெல்லுக்கு கூடுதல் விலை வழங்க கோரி விருத்தாசலத்தில், 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 11:00 PM GMT (Updated: 7 March 2018 7:32 PM GMT)

நெல்லுக்கு கூடுதல் விலை வழங்க கோரி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு 2-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த நெல், உளுந்து உள்ளிட்ட தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள். தற்போது சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கே ஏலம் எடுத்ததாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் சிலர் தங்கள் நெல் மூட்டைகளை வீட்டுக்கு திரும்ப எடுத்துச்சென்றனர். மேலும் சில விவசாயிகள், நெல்லுக்கு கூடுதல் விலை வழங்க கோரி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்து வைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்றும், கோ.43 என்ற நெல் ரகம் 999 ரூபாய்க்கும், சி.ஆர் 1,009 என்ற ரகம் 1,020 ரூபாய்க்கும், என்.எல்.ஆர். ரகம் 1,075 ரூபாய்க்கும், ஏ.டி.டி.38 என்ற ரகம் 1,019 ரூபாய்க்கும், ஏ.டி.டி. 39 என்ற ரகம் 989 ரூபாய்க்கும் என குறைந்தவிலைக்கே வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இதேபோல் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் ஏலம் எடுத்து வந்த மணிலாவும், நேற்று 4 ஆயிரத்து 706 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நெல் மற்றும் மணிலாவுக்கு கூடுதல் விலை வழங்க கோரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், அவர்களாகவே தங்கள் போராட்டத்தை கைவிட்டு, நெல் மற்றும் மணிலா மூட்டைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story