மாவட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:00 AM IST (Updated: 8 March 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 4 இடங்களில் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

விருத்தாசலம்,

தமிழகத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்துவோம் என்று கருத்து பதிவிட்ட பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விருத்தாசலத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பரமகுரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நிர்வாகிகள், எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து எச்.ராஜாவின் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதேபோல் வடலூரில் தி.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், எச்.ராஜாவை கண்டித்தும் தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில், முன்னாள் மாணவ பேரவை செயலாளர் கு.வாஞ்சிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள், எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை எதிரில் தி.மு.க.வினர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன் தலைமையில் நெல்லிக்குப்பம் சாலையிலும், மேல்பட்டாம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நிர்வாகி நெஸ்லின் தலைமையிலும் எச்.ராஜாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. 

Next Story