கைதியை வேறு சிறைக்கு மாற்றாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புழல் சிறைக்காவலர் கைது, ஜெயிலர் தலைமறைவு


கைதியை வேறு சிறைக்கு மாற்றாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புழல் சிறைக்காவலர் கைது, ஜெயிலர் தலைமறைவு
x
தினத்தந்தி 7 March 2018 11:15 PM GMT (Updated: 7 March 2018 7:32 PM GMT)

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதியை, பூந்தமல்லி சிறைக்கு மாற்றாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற புழல் சிறைக்காவலர் கைது செய்யப்பட்டார். ஜெயிலர் ஜெயராமன் தலைமறைவாகிவிட்டார்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழலில் உள்ள சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 1500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், 160-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம். கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

இங்குள்ள கைதிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் மற்்றும் ஹெராயின் போன்ற போதை வஸ்துகள் எளிதாக கிடைக்கின்றன. இங்கு வேலை செய்யும் காவலர்களே அவற்றை கைதிகளுக்கு வினியோகம் செய்வது தொடர் கதையாக உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகை நிர்ணயிக்கபட்டுள்ளது.

சிறையில் இருக்கும் கைதிகள் சொகுசாக வாழ, அவர்களின் உறவினர்கள் சிறை அதிகாரிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் லஞ்சமாக பணம் மற்றும் விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்களை வாங்கி கொடுப்பதாக கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் மிகின்அபுபக்கர்(வயது 42). இவர், கடந்த ஆண்டு போதை பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக ஜெயிலர் ஜெயராமன், கைதி மிகின் அபுபக்கரை சந்தித்து புழல் ஜெயிலில் இருந்து உன்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன் என கூறினார். இதைகேட்டு மிகின்அபுபக்கர் அதிர்ச்சி அடைந்தார்.

புழல் சிறையில் நான் யாரிடமும் எந்த தகராறும் செய்யாமல் ஒழுங்காக தானே இருக்கிறேன். எதற்காக என்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்றவேண்டும் என கேட்டார்.

அதற்கு ஜெயிலர் ஜெயராமன், “எனக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால், உன்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்ற மாட்டேன். இதுபோல்தான் 50-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி உள்ளேன். நீயும், உன் குடும்பத்தாருடன் பேசி பணத்தை வாங்கிக்கொடு?” என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த மிகின்அபுபக்கர், சரிவர சாப்பிடாமல் இருந்தார். இதற்கிடையே கடந்த வாரம் அவருடைய நெருங்கிய உறவினரான நெமிலிச்சேரியைச் சேர்ந்த லியோ என்பவர் புழல் சிறைக்கு வந்து மிகின்அபுபக்கரை பார்த்தார்.

அப்போது அவர், எனக்கு ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை ஜெயிலர் ஜெயராமனிடம் கொடுத்தால்தான் அவர் என்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்றமாட்டார் என்று கூறி கதறி அழுதார். அதற்கு லியோ, இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிட்டு சென்றார்.

பின்னர் அவர், இதுபற்றி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சிறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லியோவிடம் கொடுத்து, அதை ஜெயிலர் ஜெயராமனிடம் கொடுக்கும் படி அறிவுறுத்தி அனுப்பினர்.

அந்த பணத்தை பெற்றுக் கொண்ட லியோ, நேற்றுமுன்தினம் இரவு ஜெயிலர் ஜெயராமனிடம் கொடுக்க புழல் சிறைக்கு சென்றார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. குமரகுரு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரும் புழல் சிறைக்கு சென்று மறைந்து இருந்து கண்காணித்தனர்.

லியோ, லஞ்ச பணத்தை கொடுக்க ஜெயிலர் ஜெயராமன் அறைக்கு சென்றார். ஆனால் அந்த பணத்தை வாங்க மறுத்த அவர், நான் அலுவல் வேலையாக இருக்கிறேன். எனக்கு நெருக்கமான சிறைக்காவலர் பிச்சையாவிடம் பணத்தை கொடுங்கள் என்று கூறினார்.

அதன்படி லியோ, புழல் சிறை அருகே உள்ள காவலர் குடியிருப்புக்கு அருகில் சிறைக்காவலர் பிச்சையாவிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாய்ந்து சென்று பிச்சையாவை கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரை புழல் சிறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில், புழல் சிறையில் ஒரு மாதத்துக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை லஞ்சம் புழங்கி வருவதாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விடிய, விடிய நடத்திய விசாரணைக்கு பிறகு பிச்சையாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சிறைக்காவலர் பிச்சையா, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய தகவல் அறிந்ததும் ஜெயிலர் ஜெயராமன் தலைமறைவாகி விட்டார். அவர் கிடைத்தால்தான் புழல் சிறையில் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் கைமாறுவது உண்மையா? என்பது போன்ற மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரும்.

புழல் சிறையில் லஞ்சம் பெற்ற சிறைக்காவலர் கைதான சம்பவம், சிறை அதிகாரிகள், போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைமறைவாக உள்ள ஜெயிலர் ஜெயராமன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சம்பந்தி ஆவார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகனுக்குதான் ஜெயிலர் ஜெயராமன் தனது ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story