புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் வரி உயர்வை கண்டித்து கடையடைப்பு


புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் வரி உயர்வை கண்டித்து கடையடைப்பு
x
தினத்தந்தி 8 March 2018 3:30 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் வரி உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் சொத்துவரி, வீட்டுவரி, தொழில்வரி, குப்பைவரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் கள். இதொடர்பாக புஞ்சைபுளியம்பட்டியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வரி உயர்வை கண்டித்து 7-ந் தேதி (நேற்று) கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்றும், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. சத்தியமங்கலம்-கோவை சாலை, மாத்பாளையம் சாலை, பவானிசாகர் சாலை, திருப்பூர் சாலை மற்றும் நம்பியூர் செல்லும் சாலைகளில் உள்ள 700-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து அனைத்துக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

இந்த நிலையில் பகல் 11 மணி அளவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் தலைமையில் தி.மு.க நகர செயலாளர் சிதம்பரம், காங்கிரஸ் நகர தலைவர் சிக்கந்தர்பாஷா,. தினகரன் அணி நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை கட்சி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை மனுவுடன் திரண்டார்கள்.

பின்னர் அவர்களில் ஒரு சிலர் மட்டும் அலுவலகத்திற்குள் சென்று நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தியிடம் மனு கொடுத்தார்கள். அந்த மனுவில், ‘உயர்த்தப்பட்ட வரியை குறைக்க வேண்டும், குப்பைக்கு வரி போட்டு வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர், ‘நீங்கள் அனுப்பிய மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது, ‘நகராட்சியில் மொத்தம் 8 ஆயிரத்து 157 வரி உள்ளது. இதில் குப்பை வரி கடந்த ஒரு ஆண்டாக வசூலித்து வருகிறோம். இதில் 2 ஆயிரத்து 412 வரிவிதிப்புகளுக்கு மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார். 

Next Story