ஊட்டி, கூடலூரில் எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஊட்டி, கூடலூரில் எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:00 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, கூடலூரில் எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங்கிராசில் உள்ள பெரியார் சதுக்கத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஊட்டி,

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பதிவில், தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய எச்.ராஜாவை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழு உரிமையை பெற்று கொடுத்து இன்று சமுதாயத்தில் முக்கிய பதவிகளிலும், அரசு பணிகளிலும் பணிபுரிய வழிகாட்டியவர் தந்தை பெரியார். தமிழகத்தில் திராவிட இயக்கம் வளருவதற்கு கடுமையாக பாடுபட்டவர். அவரது சிலையை உடைப்போம் என்று எச்.ராஜா கூறி இருப்பது மிகவும் கண்டித்தக்கது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் மனதை புண்பட செய்து உள்ளது. இதற்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் பெரியாரின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு சார்பில் நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் வாகனங்கள் சுற்றி செல்ல சதுக்கமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அது பெரியார் சதுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும் சதுக்கம் மீது செருப்பு மாலை வீசுவதாக தகவல் பரவியது. அதனை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. செருப்பு மாலை வீசுவதாக வந்த தகவல் வதந்தி என்ற பின்னரே போலீசார் நிம்மதி அடைந்தனர்.

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி முன்னிலையில் ஏராளமான தி.மு.க.வினர் கட்சி கொடிகளை ஏந்தியவாறு திரண்டனர்.

பின்னர் எச்.ராஜாவை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது எச்.ராஜாவின் உருவபடங்களை தி.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். பலர் உருவப்படத்தை அவமரியாதை செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் எச்.ராஜா உருவப்படங்கள் தீயில் கருகியது. தொடர்ந்து தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் நகர சபை தலைவர் அன்னபுவனேசுவரி, நிர்வாகிகள் ரசாக், மூர்த்தி, தாஹீர், ரெனால்டு வின்சென்ட் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story