கோவை பாரதீய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 3 பேர் கைது


கோவை பாரதீய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2018 5:00 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோவை பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் கோவை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு ஏற்கனவே மிரட்டல் இருப்பதால் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே ஆயுதப்படையை சேர்ந்த 2 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் கையில் காலியான மதுபாட்டில்கள் இருந்தன. அவர்கள், முதலில் ஒரு பாட்டி லில் பெட்ரோலை ஊற்றி, திரியை திணித்து அதை பற்ற வைத்து பாரதீய ஜனதா அலுவலகம் மீது வீசினார்கள். ஆனால் அந்த பெட்ரோல் குண்டு அலுவலக விளம்பர பலகை மீது பட்டு கீழே விழுந்து வெடித்தது. அந்த சத்தம் கேட்ட உடன் போலீசாரும், அலுவலக ஊழியரும் வெளியே ஓடி வந்தனர்.

உடனே மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த மற்றொரு பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து மீண்டும் பாரதீய ஜனதா அலுவலகம் மீது வீசினார்கள். அதுவும், பாரதீய ஜனதா அலுவலக விளம்பர பலகையில் பட்டு தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து போலீசார் வருவதை பார்த்ததும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்ப முயன்றனர். அவர்களை போலீஸ்காரர் நாகலிங்கம் ஓடி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவர்கள் 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர்.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட தகவல் அறிந்ததும், போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வந்து அங்கு சிதறி கிடந்த பெட்ரோல் குண்டுகளின் தடயங்களை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

கோவை பாரதீய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. எனவே அந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் 3 பேர் வந்ததும் அவர்கள் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மறைவில் நின்று கொண்டு பெட்ரோல் குண்டு வீசுவதும், அதில் தொடர்புடைய நபர்கள் சிலர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்றுமுன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்த போது உடன் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதன் மூலம் குண்டுவீச்சு சம்பவத்தில் உடனே துப்புதுலங்கியது. அதைத்தொடர்ந்து, கோவை கவுண்டம்பாளையம், சேரன்நகரை சேர்ந்த பாலன்(வயது37) என்பவர் பிடிபட்டார். அவர் பாரதீய ஜனதா அலுவலகம் மீது குண்டு வீசியதை ஒப்புக் கொண்டார். கைதான பாலன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர அமைப்பாளர் ஜீவானந்தம் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கோவை நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த இவர், பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளாவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு சின்னதடாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இருந்தபோது, போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

ஜீவானந்தம் அளித்த தகவலின் அடிப்படையில் அவருடைய நண்பரான கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கவுதம் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பெட்ரோல் குண்டு வீசுவதற்காக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், பாரதீய ஜனதா மாநில செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும் கோவை பாரதீய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசியதாக தெரிவித்துள்ளனர்.

3 பேர் மீதும் வெடிபொருள் தடைசட்டம், தீவைத்தல், பொது இடத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகங்கள் மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story