படகு, வலைகளுடன் நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


படகு, வலைகளுடன் நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

வலைகளை நாசப்படுத்தும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு படகு மற்றும் வலைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

கடலாடி தாலுகா மேலமுந்தல், கீழமுந்தல் கிராமங்களை சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகுகளை பயன்படுத்தி தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் இப்பகுதிக்கு வந்து தொழில் செய்து வருகின்றனராம். இவர்களுக்கும், இப்பகுதி மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

மேலும் வெளிமாவட்ட மீனவர்கள் உள்ளூர் மீனவர்களின் வலைகள் மற்றும் தூண்டில்களை அறுத்து சென்று விடுவதோடு, வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டு செல்வதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது வெளிமாவட்ட மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்யும் அனுமதியை கடந்த 5-ந்தேதி முதல் ரத்து செய்வதோடு, வெளிமாவட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் வருகிற 12-ந்தேதிக்குள் மேலமுந்தல், கீழமுந்தல் பகுதியில் இருந்து வெளியேறி செல்ல வேண்டும் என்று மீன்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த உத்தரவினை மீறி அந்த பகுதிகளில் இருந்து வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதை கண்டித்தும், மீன்துறை அதிகாரிகள் உத்தரவு நகல் மேலமுந்தல் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதை கிழித்து வீசப்பட்டுள்ளதை கண்டித்தும், வலைகளை நாசப்படுத்தும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலமுந்தல், கீழ முந்தல், எஸ்.மாரியூர், ஏர்வாடி, களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, மீன்பிடி சங்க மாநில பொது செயலாளர் செந்தில்வேல், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் உள்பட பலர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் தங்களின் படகுடன் வந்ததோடு, வெளிமாவட்ட மீனவர்கள் அறுத்தெறிந்த வலைகளை யும் கொண்டு வந்திருந்த னர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நிர்வாகிகள் மீன்துறை அலுவலகத்திற்கு சென்று மீன்துறை துணை இயக்குனர் ஐசக்ஜெயக்குமார், உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உத்தரவை மீறி செயல்பட்டுள்ள வெளிமாவட்ட மீனவர்கள் மீதும், இந்த பிரச்சினைக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

Next Story