கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் இளைஞர்கள் முற்றுகை


கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் இளைஞர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 March 2018 4:00 AM IST (Updated: 8 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அரசு பள்ளிக்கு செல்லும் பாதையில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து மாணவன் படுகாயம் அடைந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஆசாத்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு புதிய பஸ் நிலையத்திற்குள் சென்றுதான் மாணவர்கள் சென்று வந்தனர். இதனால் மாணவர்கள் நலன்கருதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையத்தையொட்டி கோரையாற்றில் கலக்கும் கழிவுநீர் கால்வாய் மீது தடுப்பு சுவருடன் கூடிய பாதை அமைக்கப்பட்டது. அதில்தான் தற்போது மாணவர்கள் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த பாதையின் பல்வேறு இடங்களில் தூய்மைபடுத்துவதற்காக திறந்து கீழ இறங்கும் வகையில் மூடியும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த மூடிகளில் ஒன்று சில நாட்களுக்கு முன்பு மாயமாகிவிட்டது. இதனால் கடந்த ஒரு வார காலமாக திறந்த கிடந்தது. இதனை மூட வேண்டும் என்று சில நாட்களாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு, மாணவர்களின் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் கூறி வந்தது. இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவன் நஜிமுள், நடப்பாதையில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தான். இதனை கண்ட அப்பகுதியினர் நீண்டநேரம் போராடி மாணவன் நஜிமுளை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த மாணவனை மீட்டு முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவன் சிகிச்சை பெற்றார். கழிவுநீர் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் இருந்திருந்தால் மாணவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசாத்நகர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு உடனே திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும். மரம் விழுந்து கீழ கிடக்கும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்று கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செயல்அலுவலர் இல்லாததால் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் வீரமணி முற்றுகையிட்டனர். அப்போது அவர், உடன் நான் பார்வையிட்டு சரி செய்வதாக உறுதி அளித்தார். இதனால் அங்கிருந்து இளைஞர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story