மாவட்டம் முழுவதும் 27 ஆயிரத்து 733 மாணவ - மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்


மாவட்டம் முழுவதும் 27 ஆயிரத்து 733 மாணவ - மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டத்தில் 27 ஆயிரத்து 733 மாணவ - மாணவிகள் பிளஸ் -1 தேர்வை எழுதினர்.

திருவண்ணாமலை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது.

அதன்படி, திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டத்தில் 28,005 மாணவ - மாணவிகள் மற்றும் 19 தனித்தேர்வர்கள் என மொத்தம் 28 ஆயிரத்து 024 மாணவ - மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 27 ஆயிரத்து 717 மாணவ - மாணவிகள் மற்றும் 16 தனித்தேர்வர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 733 பேர் தமிழ் முதல் தாள் தேர்வு எழுதினர். 3 தனித்தேர்வர்கள் உள்பட 291 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

இந்த தேர்விற்காக திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்கள், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 32 தேர்வு மையங்கள் என மொத்தம் 89 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

முன்னதாக மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் தேர்வு மையத்தின் வளாகத்தில் அமர்ந்து கடைசி நிமிடம் வரை நேரத்தை வீணடிக்காமல் படித்தனர். இதனால் மாணவ - மாணவிகள் பரபரப்பாக காணப்பட்டனர். மாணவர்களை அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் வாழ்த்தினர். தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையங்களை கண்காணிக்க 96 முதன்மை கண்காணிப்பாளர்களும், 97 துறை அலுவலர்களும், 1,733 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வு அறையில் ஏதேனும் மாணவர்கள் முறை கேடுகளில் ஈடுபடுகின்றனரா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் 140 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் சென்று சோதனை செய்தனர்.

சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ் -1 தேர்வை செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் வி.ராஜசேரன் பார்வையிட்டார். 

Next Story