கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கொடி அவமதிப்பு ; கட்சியினர் சாலைமறியல்


கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கொடி அவமதிப்பு ; கட்சியினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கொடி அவமதிக்கப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ரவுண்டானா அண்ணாசிலை அருகில் பா.ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடியின் கயிற்றை மர்ம நபர்கள் அறுத்து, கட்சி கொடியை கீழே போட்டு அவமதித்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பா.ஜனதாவினர் நேற்று காலையில் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் போலீசார் வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜனதாவினர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் நீலமேகம் தலைமையில் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்.

இதைத் தொடர்ந்து பா.ஜனதாவினருக்கும், அப்பகுதியில் திரண்டிருந்த தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அப்போது, கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பா.ஜனதா நகர தலைவர் வேணுசெல்வம், செயலாளர்கள் தமிழ்செல்வன், தினேஷ், துணை தலைவர்கள் ராஜேஷ், குமார், நகர துணை தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பா.ஜனதாவினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story