குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 March 2018 10:30 PM GMT (Updated: 8 March 2018 9:34 PM GMT)

குடிநீர் வழங்கக்கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

தோகைமலை,

தோகைமலை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் உள்ள அண்ணாநகரில் சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஆலத்தூரில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆலத்தூரில் இருந்து அண்ணாநகருக்கு வரும் குடிநீர் குழாயில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாக அண்ணாநகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று வாலியம்பட்டி பகுதியில் குடிநீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து ஆலத்தூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாநகர் பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒன்றிய மேலாளர் ருக்மணி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story