மாவட்ட செய்திகள்

கீரனூர் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 7 பேர் காயம் + "||" + Jallikattu near kiranur: 7 people were injured in biting the bulls

கீரனூர் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 7 பேர் காயம்

கீரனூர் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 7 பேர் காயம்
கீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 7 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடுகப்பட்டியில் உள்ள சுருளியாண்டவர் கோவில் குருபூஜை விழாவையொட்டி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார்.


முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, கரூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 567 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன.

ஜல்லிக்கட்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, காளைகளை போட்டி போட்டு அடக்கினார்கள். சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடின. இதில் காளைகள் முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

காளைகளை அடக் கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, சில்வர் அண்டா, ஏர்கூலர், மின்விசிறி உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை வடுகப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்து கண்டு ரசித்தனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.