மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பலி: கைதான இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு + "||" + Kick the motorbike Pregnant Officer: Detained in Inspector's Prison

மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பலி: கைதான இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பலி: கைதான இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
திருச்சியில் கர்ப்பிணி பலியானதற்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
திருச்சி,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற தர்மராஜா (வயது 34).இவர் தனியார் நிதி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உஷா (வயது 30).

இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உஷா கர்ப்பம் அடைந்தார்.


இந்தநிலையில் திருச்சியில் ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை ராஜா தனது மனைவி உஷாவுடன் தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு சென்றார்.

திருச்சி துவாக்குடி சுங்கசாவடி அருகே வந்தபோது, அங்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது இரவு 7 மணி அளவில் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜாவை இன்ஸ்பெக்டர் காமராஜ் வழி மறித்தார். உடனே ராஜா சிறிது தூரம் தள்ளி சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அதற்கு அவரிடம் இன்ஸ்பெக்டர் காமராஜ், இவ்வளவு தூரம் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்துவியா? என்று கூறி திட்டினார்.

இதையடுத்து ராஜா அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அவர்களை பின்னால் விரட்டி சென்றார்.

பாய்லர் ஆலை ரவுண்டானா அருகே சென்றபோது, ராஜாவின் மோட்டார் சைக்கிளை காமராஜ் தொடர்ந்து 3 முறை எட்டி உதைத்தார். இதில் ராஜா நிலைதடுமாறி மனைவி உஷாவுடன் கீழே விழுந்தார். இதில் உஷாவின் பின் பக்கதலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் மனைவியுடன் ராஜா கீழே விழுந்ததை கண்ட அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி சென்று ராஜாவை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர். அவர் எழுந்து சென்று உஷாவை தூக்கி பார்த்தார். அவர் சுய நினைவு இன்றி இருந்தார்.

உடனே அந்த பகுதி மக்கள் ராஜாவையும், உஷாவையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உஷாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதை கேட்ட ராஜா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் கீழே விழுந்து கர்ப்பிணி இறந்த சம்பவத்தை ஆயிரக்கணக்கானோர் திரண்டு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி-தஞ்சை சாலையில் திருவெறும்பூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

போலீசார் தாக்கியதில் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்களை கல்வீசி தாக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அவர்கள் மீது பொதுசொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கும் பதிவு செய்தனர். இதற்கிடையே பலியான உஷாவின் உடல் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

நேற்று காலை பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உஷாவின் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்தனர். ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, த.மு.மு.க., வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி, மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம், மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

அவர்கள் பிரேத பரிசோதனை அரங்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் காவல்துறையினரை கண்டித்து பாடல்களை பாடி கோஷம் எழுப்பினர்.

உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். நேற்று முன்தினம் இரவு சம்பவ நடந்த இடத்தில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 23 பேரை விடுவிக்க வேண்டும். இறந்த உஷாவின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அவர்களுடன், போலீஸ் துணை கமிஷனர் சக்திகணேசன், மேற்கு தாசில்தார் பாத்திமாசகாயராஜ் மற்றும் போலீஸ் துணைசூப்பிரண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெற முடியும் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் கூறி விட்டனர். அதன்பிறகு மாவட்ட கலெக்டர் மூலமாக அரசு முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

அந்த கடிதத்தில், “இந்த சம்பவம் தொடர்பாக இறந்து போன உஷாவின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நேற்று காலை முதல் மாலை வரை போராட்டம் நடந்தது. போராட்டத்தை கைவிடக்கோரி தர்ணா போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் போலீசாரின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மாலை 5 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து மாலை 5.15 மணி அளவில் உஷாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலியான உஷாவின் கணவர் ராஜா மற்றும் அவர்களுடைய உறவினர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே கர்ப்பிணி உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. திருவெறும்பூர் போலீசார் நள்ளிரவில் இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்தனர். அவர் மீது 304(2) (மரணம் ஏற்படுத்தக்கூடும் என தெரிந்தும் அந்த குற்றத்தை செய்தல்), 336 (உயிருக்கு அபாயம் விளைவிக்கும் செய்கை) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காமராஜை நேற்று காலை 7 மணி அளவில் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-6 மாஜிஸ்திரேட்டு ஷகிலா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 21-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலெட்சுமி உத்தரவிட்டார்.