கொடைக்கானல் அருகே வ.உ.சி. சிலை உடைப்பு


கொடைக்கானல் அருகே வ.உ.சி. சிலை உடைப்பு
x
தினத்தந்தி 10 March 2018 3:30 AM IST (Updated: 9 March 2018 11:25 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே மன்னவனூர் கிராமத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலையை மர்ம நபர்கள் உடைத்தனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கொடைக்கானல்,

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் சிலை தகர்க்கப்பட்டது. இந்தநிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் பெரியார் குறித்து கருத்து பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தினர். இதனால் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உள்பட அனைத்து தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் பெரியார் சமத்துவபுரத்தில் வைக்கப் பட்டுள்ள அவருடைய சிலை மற்றும் காமராஜர், எம்.ஜி.ஆர்., அண்ணா உள்பட அனைத்து சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகளின் அருகில் போலீசார் இரவு பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் கிராமத்தில் மந்தை பகுதியில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலையை நேற்று மதியம் 2 மணி அளவில் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதில் சிலையின் கை விரல் பகுதி சேதமடைந்தது. இந்த சிலைக் கும் கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று மதியம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சிலை சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஊரை சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே தகராறு இருந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் வ.உ.சி. சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.

சிலையை உடைத்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story