வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும்


வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும்
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

திருப்பூர்,

தமிழக மாவட்ட கலெக்டர்கள் மாநாடு சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று விட்டு வந்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் மாநாடு குறித்து ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கை திறமையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும், விரைவாகவும் அளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு துறை வாரியாக திருப்பூர் மாவட்டத்துக்கான தேவைகள் குறித்து பட்டியலிட்டு அளிக்கப்பட்டது. துறை வாரியாக பரிசீலனை செய்து ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி, அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாகவும், மக்கள் சேவகர்களாகவும் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். துறைவாரியான செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகா வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது குறித்தும், அந்த முகாமில் ஒரே இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கப்பட்ட விவரத்தையும் தெரிவித்தேன். இதற்காக பாராட்டு தெரிவித்தார்கள்.

மக்களுக்கான வளர்ச்சித்திட்ட பணிகள், மாவட்டத்தின் திட்டப்பணி இலக்குகள் அனைத்தையும் வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இலக்கு நிர்ணயித்தபடி, அனைத்து பணிகளையும் இந்த மாதத்துக்குள் முடிக்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு துறை அதிகாரிகளிடமும் எடுத்துக்கூறப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டதைப்போல், திருப்பூர் மாவட்டத்தில் மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும்.

மாவட்டத்தின் தேவைகள் குறித்து மாநாட்டில் பட்டியல் அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் புறவழிச்சாலை 8.3 கிலோ மீட்டர் நீளம் அமைக்கும் பணியில் முதல்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை நெடுஞ்சாலை துறையால் தயாரிக்கப்படும். உடுமலை அரசு மருத்துவமனைக்கு ரூ.6 கோடி மதிப்பில் 200 படுக்கைகள் கொண்ட பொதுப்பிரிவு அமைக்கப்படும். மேலும் ரூ.1.75 கோடி மதிப்பில் புதிதாக சி.டி.ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்படும்.

பல்லடம் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள மங்கலம் போலீஸ் நிலைய போலீசாருக்கு ரூ.11 கோடியே 47 லட்சம் மதிப்பில் 80 குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநாட்டிலேயே அறிவிப்பு செய்தார். அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்புடன் மக்களுக்கு விரைவான சேவை கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story