ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 March 2018 4:30 AM IST (Updated: 11 March 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

கோவையை சேர்ந்தவர் சுதிர். இவர் திருப்பூர் அப்பாச்சி நகரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ராக்கியாபாளையம் பிரிவு குமரன் காலனியை சேர்ந்த பழனிநாதன்(வயது 49) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளையும் பழனிநாதன் கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக நிறுவனம் சரிவர இயங்காததால் கடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நிறுவனம் சார்பில் கொடுக்க வேண்டிய கடன் தொகையை, கடனாளிகள் மேலாளரான பழனிநாதனிடம் கேட்டு வந்துள்ளனர். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பழனிநாதன் நேற்று முன்தினம் தனது நிறுவனத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய உடலை மீட்ட திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பழனிநாதனின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கூடினார்கள். அவர்கள், பழனிநாதன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பழனிநாதன் மரணத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த பின்னரும் தொடர்ந்து உறவினர்கள் பழனிநாதனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

Next Story