உடலில் பற்றி எரிந்த தீயுடன் சாலைக்கு ஓடி வந்த பெண் சாவு காரணம் என்ன? போலீசார் விசாரணை


உடலில் பற்றி எரிந்த தீயுடன் சாலைக்கு ஓடி வந்த பெண் சாவு காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

பெட்டவாய்த்தலை பகுதியில் உடலில் பற்றி எரிந்த தீயுடன் சாலைக்கு ஓடி வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோமதி(வயது 50). இவருடைய கணவர் பெருமாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவரை அறந்தாங்கியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மற்றொருவர் சென்னையில் வேலை பார்த்து கொண்டே படித்து வருகிறார். கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கோமதி, அப்பகுதியில் மோட்டார்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோமதி உடலில் பற்றி எரிந்த தீயுடன் வீட்டில் இருந்து திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அவருடைய வீட்டின் முன்பு உள்ள சாலையை நோக்கி ஓடி வந்தார். அப்போது இரவு நேர பணியில் இருந்த போலீசார், உடலில் எரியும் தீயுடன் ஒருவர் ஓடி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அங்கு சென்று, தீயை அணைத்து கோமதியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை யாரேனும் தீ வைத்து கொளுத்தினரா? அல்லது அவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் தீ வைத்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் பற்றி எரிந்த தீயுடன் சாலைக்கு பெண் ஒருவர் ஓடி வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story