நிலம் எடுப்பு-கையகப்படுத்துதல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்


நிலம் எடுப்பு-கையகப்படுத்துதல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 11 March 2018 4:15 AM IST (Updated: 11 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை சார்பில் நிலம் எடுப்பு, கையகப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி,

வருவாய்த்துறையின் சார்பில் நிலம் எடுப்பு, நிலம் மாற்றம், நிலம் கையகப்படுத்துதல், குத்தகை இனங்கள் மற்றும் பட்டா மாற்றம் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கூடுதல் தலைமை செயலாளரும், நில நிர்வாக ஆணையருமான ஜெயக்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டார்.

கூட்டத்தில், திருச்சி விமான நிலைய விரிவாக்கம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை மேம்பால பணிகள் மற்றும் திண்டுக்கல் - விழுப்புரம் இடையே இரட்டை வழி அகல ரெயில்பாதை ஆகியவற்றுக்கு நிலம் கையகம் செய்வது தொடர்பான பணிகளில் முன்னேற்றம் மற்றும் நில மாற்றம், நிலக்குத்தகை, இலவச வீட்டு மனைப்பட்டா, இணையவழி பட்டா மாற்றம் நில ஆவணங்களை கணினி வழி பதிவேற்றம் செய்தல் ஆகியவை தொடர்பாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக திருவெறும்பூர் வட்டத்தை சேர்ந்த 2 கிராம உதவியாளர்களுக்கும், முசிறி வட்டத்தை சேர்ந்த 3 கிராம உதவியாளர்களுக்கும், லால்குடி வட்டத்தை சேர்ந்த 2 கிராம உதவியாளர்களுக்கும், மண்ணச்சநல்லூர் வட்டத்தை சேர்ந்த 2 கிராம உதவியாளர்களுக்கும், மேலும் தொட்டியம், மருங்காபுரி வட்டத்தை சேர்ந்த கிராம உதவியாளர்கள் என மொத்தம் 11 கிராம உதவியாளர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு ஆணையினை கூடுதல் தலைமை செயலாளர் ஜெயக்கொடி வழங்கினார்.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்தில் நில உடமை ஆவணங்கள், பெயர் மாற்றம், பதிவு உள்ளிட்ட பிரிவுகள் எவ்வாறு ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் செயல்படுகிறது என்பதையும், நேரடியாக ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதையும், அதன் முன்னேற்றம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர், உதவி கலெக்டர் (பயிற்சி) மணீஷ்நார்னரே ரெட்டி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள், துணை கலெக்டர்கள், ரெயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story