பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து 23 பெண்கள் காயம்


பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து 23 பெண்கள் காயம்
x
தினத்தந்தி 11 March 2018 4:30 AM IST (Updated: 11 March 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 23 பெண்கள் காயம் அடைந்தனர்.

ஆரணி,

ஆரணி பகுதியில் உள்ள களம்பூர், முக்குறும்பை, அய்யம்பேட்டை பகுதிகளை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். ஷிப்டு வாரியாக பணியாற்றும் இவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வேனில் சென்று திரும்பி வருகின்றனர்.

அதன்படி நேற்று அதிகாலை சுமார் 23 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் நிறுவன வேன் ஆரணி வழியாக ஒரகடம் செல்வதற்காக செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை டிரைவர் கனகவேல் ஓட்டிச்சென்றார். அப்போது தாறுமாறாக சென்ற வேன் பையூர் ஆற்று மேம்பாலம் அருகில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் வேனுக்குள் சிக்கிய பெண்கள் ‘அய்யோ, அம்மா’ என அலறிக்கொண்டிருந்தனர்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு 2 ஆம்புலன்சுகள் வந்தன.

சிகிச்சை

காயம் அடைந்த பத்மா (வயது 20), சுவேதா (20), ஷில்பா (21), விஜயலட்சுமி (25), அனிதா, புனிதா, பழனிச்செல்வி, லாவண்யா, உஷா, சங்கீதா, அர்ச்சனா, மகாலட்சுமி உள்பட 23 பெண்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் ஆ.சுப்பிரமணி, துணை போலீஸ் சுப்பிரண்டு இ.செந்தில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் அலுவலர்கள் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆறுதல் கூறி நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். விபத்து குறித்து அறிந்த பெண்களின் உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்தனர்.

இதனிடையே விபத்து நடந்ததும் வேனிலிருந்து டிரைவர் கனகவேல் குதித்து உயிர்தப்பி ஓடினார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story