மும்பையை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி


மும்பையை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி
x
தினத்தந்தி 11 March 2018 3:56 AM IST (Updated: 11 March 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கில் இருந்து புறப்பட்ட பிரமாண்ட விவசாயிகள் பேரணி நேற்று தானே மாவட்டம் வந்தடைந்தது.

தானே,

விவசாயிகள் பேரணிக்கு ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா தனது ஆதரவை தெரிவித்தது.

அகில இந்திய கிஷான் சபா சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ந் தேதி நாசிக்கில் இருந்து மும்பையில் உள்ள மராட்டிய சட்டசபை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணியை தொடங்கினர். இதில் 25 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேரணியில் பங்கு கொண்டு உள்ளனர்.

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், நாளை (திங்கட்கிழமை) பேரணியாக வரும் விவசாயிகள் சட்டசபையை (விதான் பவன்) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் பேரணி நேற்று தானே மாவட்டத்தை வந்தடைந்தது.

அப்போது பேரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அஜித் நாவ்லே, முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், வன உரிமை சட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பா.ஜனதா தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக மாநில அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாசிக், தானே மற்றும் பால்கர் மாவட்ட நதி நீர் இணைப்பு திட்டத்தில் மாற்றம் செய்து பழங்குடியினரின் நிலங்கள் மூழ்காதவாறு அவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தானே மாவட்டம் சகாப்பூரில் பேரணியாக வந்த விவசாயிகளை சிவசேனாவை சேர்ந்த பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சந்தித்தார். அப்போது விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இதுகுறித்து அஜித் நாவ்லே, எங்களது பேரணியை மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்றார். பேரணிக்கு சிவசேனா முழு ஆதரவு தெரிவிப்பதாகவும், கோரிக்கைகள் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் பேசுவதாகவும் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

இதேபோல மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரேயின் பிரதிநிதியான அபிஜித் ஜாதவ் விவசாயிகளை சந்தித்தார். அப்போது விவசாயிகளுடன் ராஜ்தாக்கரே தொலைபேசியில் பேசி தங்களது கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.

அரசை கண்டித்து நடக்கும் விவசாயிகள் பேரணிக்கு ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story