மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களே தேர்தலில் வெற்றி பெற முடியும் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களே தேர்தலில் வெற்றி பெற முடியும் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2018 4:30 AM IST (Updated: 12 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தினம் ஒரு கட்சி, தலைவர் வரலாம். ஆனால் மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

திருச்சி,

தே.மு.தி.க. சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வந்த பிரேமலதா விஜயகாந்த் விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி, பிரியங்கா கூறி இருக்கிறார்கள். ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சட்ட ரீதியில் என்ன முடிவை எடுக்கிறார்களோ, அதை தான் தே.மு.தி.க. ஆதரிக்கும். நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ, அது தான் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு. தற்போது உலக மகளிர் தினத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் தினந்தோறும் பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. ஹெல்மெட் போட வேண்டும் என்ற சட்டத்தை மதிக்க வேண்டும். ஆனால் அதற்காக ஹெல்மெட் போடவில்லை என்று ஒரு இன்ஸ்பெக்டர் விரட்டி சென்றதால் அப்பாவி பெண் உஷாவின் உயிர் பறிபோய் இருக்கிறது. இதனை உண்மையிலேயே யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்தது மட்டுமின்றி, அவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது. மேலும், உஷா பலியானதை கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது மேலும், மேலும் போலீசார் வழக்கு போடக்கூடாது. பொதுமக்கள் தங்கள் உணர்வை தான் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களை மன்னித்துவிட வேண்டும். தமிழகத்தில் தினம், தினம் ஒரு கட்சி வருகிறது. தினம் ஒரு தலைவர் வருகிறார். கடைசியில் மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களே தேர்தலில் வெற்றி பெற முடியும்.

காவிரி பிரச்சினை நீண்டநெடிய நாட்களாக ஒரு தொடர் பிரச்சினையாக இருக்கிறது. முதல் முறையாக ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது தான். இதுவரை கர்நாடகாவில் தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்கள். தமிழகத்தில் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி இருப்பதை வரவேற்கிறோம். நிச்சயமாக இந்த ஆண்டாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நல்ல தீர்வு வரும் என்று எதிர்பார்க்கலாம். மணல் என்பது இயற்கை வளம். அதை கொள்ளையடிப்பது தவறான விஷயம். எம்.சாண்ட் மணலின் உறுதித்தன்மை குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் திருச்சி கே.கே.நகர் சுந்தர்நகரில் உள்ள உஷாவின் உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு உஷாவின் கணவர் ராஜாவுக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

Next Story