ஒரே நேரத்தில் 1,430 மாணவ-மாணவிகள் தேக்வாண்டோ பயிற்சி கின்னஸ் சாதனைக்கு முயற்சி


ஒரே நேரத்தில் 1,430 மாணவ-மாணவிகள் தேக்வாண்டோ பயிற்சி கின்னஸ் சாதனைக்கு முயற்சி
x
தினத்தந்தி 12 March 2018 4:00 AM IST (Updated: 12 March 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் ஒரே நேரத்தில் 1,430 மாணவ-மாணவிகள் தேக்வாண்டோ பயிற்சி மேற்கொண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தேக்வாண்டோ சங்கம் சார்பில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான மாணவ-மாணவிகளை கொண்டு தேக்வாண்டோ பயிற்சி மேற்கொண்டு கின்னஸ் சாதனை புரிய முடிவெடுக்கப்பட்டது. இதன்படி தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று கின்னஸ் சாதனைக்கான தேக்வாண்டோ பயிற்சி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வமணி தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட செயலாளர் சுதாகர் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சக்திவேல், வசந்தகுமார், முத்துக்குமரன் மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரூர் இந்தியன் மெட்ரிக் பள்ளி தாளாளர் மூர்த்தி தேக்வாண்டோ பயிற்சியை தொடங்கி வைத்தார். கின்னஸ் சாதனை அமைப்பின் முதன்மை நிர்வாகி சுனில்ஜோசப் மேற்பார்வையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 1,430 மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் தேக்வாண்டோ பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது 4 வகையான தாக்குதல் முறைகளுடன் கூடிய 20 வகையான தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 12 நிமிடம் 55 வினாடிகள் இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெற்றது. இந்த பயிற்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

இந்த பயிற்சி குறித்து சங்க மாவட்ட செயலாளர் சுதாகர் கூறியதாவது:-

ஐதராபாத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் 1,152 மாணவ-மாணவிகள் தேக்வாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தர்மபுரியில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 1,430 மாணவ-மாணவிகள் தேக்வாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்து உள்ளனர். மொத்தம் 10 நிமிடங்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

ஆனால் அந்த காலஅளவு இலக்கை தாண்டி 12 நிமிடம் 55 வினாடிகள் மாணவ-மாணவிகள் அனைவரும் சிறப்பாக பயிற்சியை செய்து முடித்துள்ளனர். இந்த சாதனை தொடர்பான பதிவுகள் கின்னஸ் அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான முயற்சி நிச்சயம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story