ஓய்வூதியத்தை அரசே ஏற்று வழங்க வேண்டும் போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்


ஓய்வூதியத்தை அரசே ஏற்று வழங்க வேண்டும் போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 March 2018 4:30 AM IST (Updated: 12 March 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியத்தை அரசே ஏற்று வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம், நாகை மண்டல ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அப்பாதுரை, பொருளாளர் பாலசுப்பிரமணியன், கவுரவ தலைவர் மல்லி.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 65 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு தொடர் போராட்டம் காரணமாக தற்போது அரசிடம் நிதி பெற்ற முதல் வாரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து ஓய்வூதியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட அரசு நியமித்த குழு சமர்ப்பித்த முடிவின் அடிப்படையில் போக்குவரத்து டிரஸ்ட் சார்பில் வழங்கும் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.


இந்த ஓய்வூதிய திட்டத்தில் தற்போது பணியில் சேர்ந்துள்ள புதிய பணியாளர்கள் 70 ஆயிரம் பேரை இணைப்பது என்ற அறிவிப்பையும் வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) தஞ்சை புறநகர் கோட்ட அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் தற்காலிக பணிநீக்கம் செய்தது, இடமாற்றம், பணி வழங்க மறுப்பது, பணி நிரந்தரத்தை தள்ளி போடுவது உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கும்பகோணம் கோட்ட நிர்வாகம் கைவிடுவதோடு, அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி தொழில் அமைதி காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூல் செய்வதை வன்மையாக கண்டிப்பதுடன், இலவசமாக வாகனம் நிறுத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story