தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்கு பெட்டகம் கையாளுவதில் புதிய சாதனை


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்கு பெட்டகம் கையாளுவதில் புதிய சாதனை
x
தினத்தந்தி 13 March 2018 4:15 AM IST (Updated: 13 March 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்கு பெட்டகம் கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.

தூத்துக்குடி,

தென்னிந்தியாவின் பொருளாதார எந்திரமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதிஆண்டில் கடந்த 7.3.2018 வரை 6 லட்சத்து 43 ஆயிரத்து 720 சரக்குபெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 103 சரக்குபெட்டகங்கள் கையாளப்பட்டு இருந்தன.

இந்திய பெருந்துறைமுகங்களில் 4–வது பெரிய சரக்குபெட்டகங்களை கையாளும் துறைமுகமான வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 11.3.2018 வரை 6 லட்சத்து 52 ஆயிரத்து 168 சரக்குபெட்டகங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்குபெட்டகங்களை ஒப்பிடும்போது, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 8.63 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு சரக்குபெட்டகங்கள் பரிமாற்றம் செய்வதற்கு குறைந்த நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பருத்தி நூல், கைத்தறி, எந்திரங்கள், கடல் உணவுகள் மற்றும் காகிதம் ஆகிய சரக்குகள் ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பருத்தி நூல், உலோக ஸ்கிராப், காகித கழிவு மற்றும் ரசாயனம் ஆகிய சரக்குகள் ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு மிக அருகில் ஒரு உள்நாட்டு சரக்குபெட்டக முனையம் மற்றும் 14 சரக்குபெட்டக நிலையங்கள் அமைந்திருப்பது, சரக்குபெட்டகங்களை துறைமுகத்திற்கு உள்ளாகவும் மற்றும் வெளியே எளிதாக எடுத்து செல்லும் வகையில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்த தகவல் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story