மயானம் கட்டும் பணியின் போது விபத்து: மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி


மயானம் கட்டும் பணியின் போது விபத்து: மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே மயானம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலியானார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் காலனி தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55). கொத்தனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். தங்கராசு தா.பழூரை அடுத்த சிந்தாமணி பாலம் அருகில் மயானம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்ற அவர், அங்கு மயான மேற்கூரையில் சிமெண்டு பூச்சு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, தங்கராசு திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மயான மேற்கூரையை ஒட்டி சென்ற, உயர் அழுத்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டதில் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட, தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த தா.பழூர் மற்றும் சிந்தாமணி காலனி தெருவை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு மயானம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தா.பழூர் - ஜெயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

சிந்தாமணி கிராமத்தில் புதிதாக மயான கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த கொட்டகையின் மேற்கூரையில் அருகில் தாழ்வான உயரத்தில் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இங்கு மயானம் கட்டாதீர்கள், இதனால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புண்டு என்று கட்டிடப்பணி ஆரம்பிக்கும்போதே தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை. அன்றைக்கே இது தொடர்புடைய அதிகாரிகள் மின்பாதையை சீரமைத்து, அதன்பிறகு கட்டிட பணிகளை தொடங்க நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்றைக்கு இந்த உயிர் பலி ஏற்பட்டிருக்காது. அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இதற்கு பிறகும் இதை சீரமைக்கவில்லை என்றால், தொடர்ந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பொதுமக்களுக்கு எந்த வித இடையூறு இல்லாதபடி மயான கொட்டகையை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்து தா.பழூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால், தா.பழூர்-ஜெயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story