ஜி.அரியூரில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டரிடம், பள்ளி மாணவர்கள் கோரிக்கை


ஜி.அரியூரில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டரிடம், பள்ளி மாணவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 March 2018 4:15 AM IST (Updated: 13 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஜி.அரியூரில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டரிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்,

திருக்கோவிலூர் தாலுகா ஜி.அரியூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த 2 கடைகளும் மெயின்ரோட்டில் உள்ளன. எங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த கடைகளை கடந்துதான் பள்ளிக்கு சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களும் அத்தியாவசிய தேவைக்காக இந்த கடைகளை கடந்துதான் சென்று வருகின்றனர்.

இப்படியிருக்க இந்த டாஸ்மாக் கடைகளுக்கு மது குடிக்க வருபவர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இங்கு மது குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் நடுரோட்டிலேயே நின்றுகொண்டு அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களிடமும் தகராறு செய்து வருகின்றனர்.

இதை தவிர்க்க எங்கள் ஊரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story