வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்ற பெண் தற்கொலை செய்தாரா? கலெக்டரிடம் மகன் மனு


வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்ற பெண் தற்கொலை செய்தாரா? கலெக்டரிடம் மகன் மனு
x
தினத்தந்தி 13 March 2018 4:00 AM IST (Updated: 13 March 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்ற பெண் தற்கொலை செய்ததாக கூறப்படுவதால் அது குறித்து உறுதியான தகவலைதெரிவித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மகன் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார்.

திருவண்ணாமலை,

தண்டராம்பட்டு தாலுகா க.உண்ணாமலைபாளையம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் மணிகண்டன் கலெக்டரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

என் தந்தை நான் சிறுவயதாக இருந்தபோதே இறந்து விட்டார். தாயார் குமாரி வீட்டு வேலை செய்து என்னை வளர்த்து வந்தார். இந்த நிலையில் எனது தாயார் வெளிநாடு செல்ல பலரிடம் சொல்லி வைத்திருந்தாார்.

அதன்படி தண்டராம்பட்டு தாலுகா இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்த ஜான் என்பவர் என் தாயாரை தொடர்பு கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் “வீட்டு வேலைக்கு சவுதி அரேபியாவுக்கு செல்ல என்னிடம் விசா உள்ளது. சவுதி அரேபியாவுக்கு செல்கிறீர்களா” என்று கேட்டார்.

விசா யார் கொடுத்தது என்று கேட்டதற்கு, இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் கொடுத்ததாகவும், சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்ல ரூ.80 ஆயிரம் செலவாகும் என்றும், மாத சம்பளம் ரூ.25 ஆயிரம் கிடைக்கும் என்று கூறினார். குடும்ப வறுமை காரணமாக என் தாயார் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி ஜான், ஏசுதாஸ் இருவரிடமும் கொடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி சவுதிஅரேபியாவுக்கு சென்றார்.

அங்கு சென்றபின் அவர் என்னிடம் தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், திடீரென கடந்த 2 மாதமாக எந்த விதமான போனும் வரவில்லை. என் தாயாரை வெளிநாடு அனுப்பிய ஜானிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது “உன் தாயார் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்” என என்னிடம் கடந்த 10-ந் தேதி கூறினார்.

இந்த நிலையில் எங்கள் ஊரில் வசிக்கும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நபர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க கூறியும் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறுதியாக சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்த ரகு என்பவர் என் தாயார் இறந்து விட்டதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல் தெரிவித்தார். என் தாயார் உயிருடன் இருக்கிறாரா, அவர் உயிருடன் இருந்தால் அவரை நான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், இறந்திருந்தால் என் தாயாரின் உடலை ஊருக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என் தாயாரின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story